கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் தி.மு.க., பங்கு கொடுக்குமா? * திருமாவளவனை கொம்பு சீவும் சீமான்
கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் தி.மு.க., பங்கு கொடுக்குமா? * திருமாவளவனை கொம்பு சீவும் சீமான்
ADDED : செப் 14, 2024 08:55 PM
மதுரை:''ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு கூட்டணி ஆட்சியில் பங்கு கொடுத்தது போல், தி.மு.க., தனது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்குமா'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார்; மிரட்டப்பட்டுதான் அப்படி நடந்துள்ளது. தொழில் நிறுவனத்தின் அதிபருக்கே இந்நிலை என்றால் சாதாரண மக்களின் நிலையை தெரிந்து கொள்ளுங்கள். மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்டது தவறு என தெரிந்து அண்ணாமலை, மன்னிப்பு கேட்டதை வரவேற்கிறேன்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவன் தைரியம் பாராட்டுக்குரியது. 2021 சட்டசபை தேர்தலில், இதே முழக்கத்தை வைத்து திருமாவளவன் தேர்தலை சந்தித்து இருக்கலாமே. இனியாவது, அவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.
வரும் தேர்தலில் மது ஒழிப்புக்கு ஆதரவாக உள்ள கட்சிகளுடன் திருமாவளவன் கூட்டணி சேர வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தி.மு.க.,வையும் சேர்த்துதான் திருமாவளவன் சொல்கிறார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, கூட்டணி ஆட்சியில் பவன் கல்யாணுக்கு பங்கு கொடுத்தது போல தி.மு.க., தனது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும்.
கருணாநிதி குடும்பத்தில்தான் துணை முதல்வர்கள் இருக்க வேண்டுமா? இதை எதிர்த்து தான் திருமாவளவன் கேள்வி கேட்கிறார். இனிவரும் காலங்களில் தன் நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்க வேண்டும். புதிதாக கட்சி தொடங்கும்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் நெருக்கடி தருவது வாடிக்கைதான். விஜய் அரசியலுக்கு புதிது. நான் கட்சி துவங்கிய போதும், இப்படி பல இன்னல்களை சந்தித்தேன். விஜய் சந்திக்க வேண்டிய இன்னல்கள் நிறைய இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.