மின் கொள்முதல் விபரம்: மக்களுக்கு தெரிவிக்குமா மின்சார வாரியம்?
மின் கொள்முதல் விபரம்: மக்களுக்கு தெரிவிக்குமா மின்சார வாரியம்?
ADDED : பிப் 10, 2025 05:14 AM

சென்னை : தமிழக மின் நுகர்வு, தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக உள்ளது. இதை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் கிடைக்கவில்லை. அதனால், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது.
இதுதவிர, உடனடிக்கு தேவைக்கு, மின்சார சந்தைகளிலும் மின்சாரம் வாங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மின் கொள்முதலுக்கு மட்டும், 45,000 கோடி முதல், 50,000 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. கடந்த, 2024 கோடை காலத்தில் மே 2ம் தேதி, எப்போதும் இல்லாத அளவாக, மின்நுகர்வு, 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது.
அதனால், வரும் கோடை காலத்தில், 22,000 மெகா வாட்டாக அதிகரிக்கும் என, மின் வாரியம் மதிப்பீடு செய்துள்ளது. இதை பூர்த்தி செய்வதற்காக, மார்ச் முதல் மே வரை, குறுகிய காலத்திற்கு மின் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த பணிகளில், மின் வாரியம் ஈடுபட்டு வருகிறது.
மின் கொள்முதல் விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்க, மாநில மின் வாரியங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
எனவே, எந்தெந்த நிறுவனத்திடம் இருந்து, எவ்வளவு மின்சாரம் என்ன விலைக்கு வாங்கப்பட உள்ளது என்ற விபரத்தை, மின் வாரியம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.