உளுந்துார்பேட்டையில் காலணி பயிற்சி மையம் மத்திய நிறுவனத்துக்கு அரசு நிலம் வழங்குமா?
உளுந்துார்பேட்டையில் காலணி பயிற்சி மையம் மத்திய நிறுவனத்துக்கு அரசு நிலம் வழங்குமா?
ADDED : ஆக 20, 2024 02:48 AM
சென்னை;உலகின் முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனங்கள் கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்சாலைகளை அமைக்க உள்ளன.
சீனாவில் தோல் பொருட்கள் மற்றும் தோல் அல்லாத காலணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தங்களின் ஆலைகளை வேறு நாடுகளுக்கு இடமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
எனவே, காலணி துறையில் முதலீட்டை ஈர்க்க, தமிழக அரசின், 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம், ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் மாபெரும் காலணி மற்றும் துணை பொருட்கள் தொகுப்பு தொழில் பூங்காவை, 348 ஏக்கரில் அமைத்து வருகிறது.
அதில், 201 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைகிறது.
இங்கு, தைவான் நாட்டின், 'ஹோங் பூ இண்டஸ்டிரியல் குரூப்' நிறுவனம் தொழில் துவங்க, 130 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, தைவானின் மற்றொரு நிறுவனம், உளுந்துார்பேட்டையில், 20,000 பேருக்கு வேலை வழங்கும் வகையில் தோல் அல்லாத காலணி தயாரிக்கும் ஆலை அமைக்க உள்ளது.
இதையடுத்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சர்வதேச தரத்தில் காலணி தொடர்பான பயிற்சிகளை அளிக்க, உளுந்துார்பேட்டையில் தொழில்நுட்ப விரிவாக்க பயிற்சி மையம் அமைக்க, சென்னை கிண்டியில் உள்ள மத்திய காலணி பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு, தமிழக அரசு நிலமும், கட்டடமும் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு, மத்திய காலணி பயிற்சி நிறுவனத்திடம் எழுந்துள்ளது.
இது குறித்து, மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் கே.முரளி கூறியதாவது:
தோல் மற்றும் தோல் அல்லாத காலணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள், தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க உள்ளன. இதற்காக, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த ஆலைகள் அமையும் இடத்தின் மையப் பகுதியாக உளுந்துார்பேட்டை உள்ளது.
அங்கு, தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் திறனில் இளைஞர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்க, உளுந்துார் பேட்டையில் தொழில்நுட்ப புத்தாக்க பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, தமிழக அரசு உளுந்துார்பேட்டையில் நிலமும், கட்டடமும் வழங்கினால், பயிற்சி மையம் அமைக்கும் பணி துவக்கப்படும்.
இதனால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.