-பள்ளிக்கல்வி துறை அதிரடியை பின்பற்றுமா உயர் கல்வித்துறை?
-பள்ளிக்கல்வி துறை அதிரடியை பின்பற்றுமா உயர் கல்வித்துறை?
ADDED : மார் 17, 2025 01:01 AM

கோவை: கல்லுாரிகளில் பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக்கல்வி துறையை போல, உயர்கல்வி துறையும், குற்றம் சாட்டப்பட்டவரை பணியில் இருந்து, 'டிஸ்மிஸ்' செய்து நடவடிக்கை எடுக்க, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன், பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட, 23 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அவர்களின் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது.
கண்டுகொள்வதில்லை
உயர்கல்வி துறையிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்க கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறுகையில், “உயர்கல்வித் துறையில் பாலியல் புகார்கள் பல நிலுவையில் உள்ளன. யாரும் கண்டு கொள்வதில்லை.
“விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; பள்ளிக்கல்வி துறையில் எடுக்கப்பட்டுள்ளது நல்ல நடைமுறை. இதை உயர்கல்வி துறையிலும் மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.
கல்வியாளர் ரவிசங்கர் கூறுகையில், “ஏராளமான பல்கலைகளில் பாலியல் புகார்கள் உள்ளன. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, முறையான பதில் இல்லை.
“கல்லுாரிகளில் உள்ளூர் புகார் குழுக்கள் முறையாக செயல்படுவதில்லை. கல்லுாரி கல்வி இயக்குநரகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்பட்டவர் குறித்த விபரங்களை அந்தந்த பள்ளி, கல்லுாரிகளில் வெளிப்படுத்த வேண்டும்,” என்றார்.
நடவடிக்கை அவசியம்
பாரதியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் கூறுகையில், “அந்தந்த பல்கலைகளில் உள்ள சிண்டிகேட், அவசியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஆராய்ச்சி மாணவர்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் அதிகம் நடக்கின்றன.
“பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கையை முன்னுதாரணமாக கொண்டு, உயர்கல்வி துறையிலும் உடனடி நடவடிக்கை அவசியம்,” என்றார்.