ஏப்ரல் 17 - 21 வரை 'வெயிட்டிங் லிஸ்ட்' அதிகம் சிறப்பு ரயில் இயக்குமா ரயில்வே துறை?
ஏப்ரல் 17 - 21 வரை 'வெயிட்டிங் லிஸ்ட்' அதிகம் சிறப்பு ரயில் இயக்குமா ரயில்வே துறை?
ADDED : ஏப் 13, 2024 02:06 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:வரும் 17 முதல், 21 வரை சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து கோவை, மதுரை, நாகர்கோவில், ராமேஸ்வரம் மார்க்கங்களில் இயங்கும் அனைத்து ரயில்களிலும், டிக்கெட் முன்பதிவிற்கான, 'வெயிட்டிங் லிஸ்ட்' மிகவும் அதிகமாக உள்ளது.
ஏப்., 19ல் தேர்தல் ஓட்டுப் பதிவு செய்ய வருவதற்கு போதிய ரயில் வசதி இல்லாமல், பல ஆயிரம் வாக்காளர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டுமென தமிழக வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு, வந்தே பாரத், தேஜஸ், குருவாயூர், வைகை, செந்துார், கொல்லம், கன்னியாகுமரி, நாகர்கோயில், முத்து நகர், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, பாண்டியன் ஆகிய 14 ரயில்கள் தினமும் இயங்குகின்றன.
திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் மற்றும் சிலம்பு ரயில்களும் இயங்குகின்றன. சென்னையில் இருந்து ரயில்களில் ஏப்ரல் 17 முதல், 21 வரை மிகவும் அதிகளவில் வெயிட்டிங் லிஸ்ட் உள்ளது.
பல ரயில்களில் டிக்கெட் புக் செய்ய வசதி இல்லாத 'ரிக்ரட்' எனும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல, பெங்களூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், வெயிட்டிங் லிஸ்ட் அதிகம் உள்ளது.
வெளிமாவட்ட வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை பதிவு செய்ய போதிய ரயில் வசதியின்றி தவிக்கின்றனர். இதனால், ஓட்டுப்பதிவு சதவீதம் குறையும் அபாயம் உள்ளது
எனவே, ஏப்., 17 முதல் 23 வரை சென்னையில் இருந்தும், பெங்களூரில் இருந்தும் கோவை, மதுரை, ராமேஸ்வரம், திருநெல்வேலி, செங்கோட்டை மார்க்கங்களில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

