ரூ.20,000 கோடி வருவாய் இலக்கை எட்டுமா பதிவுத்துறை?
ரூ.20,000 கோடி வருவாய் இலக்கை எட்டுமா பதிவுத்துறை?
UPDATED : மார் 22, 2024 12:52 PM
ADDED : மார் 22, 2024 12:52 AM
சென்னை:பதிவுக்கு வரும் பத்திரங்களின் எண்ணிக்கை சரியத் துவங்கியதால், நடப்பு நிதி ஆண்டு வருவாய் இலக்கான 20,000 கோடி ரூபாயை, பதிவுத்துறை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள், சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. இதன் வாயிலாக கிடைக்கும் வருமானம் தான், அரசின் பிரதான நிதி ஆதாரமாக உள்ளது.
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் பத்திரப்பதிவு வாயிலாக, 17,296 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. இதையடுத்து, 2023 - 24 நிதியாண்டில், 20,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிப்ரவரி இறுதி வரையிலான நிலவரப்படி, 18,000 கோடி ரூபாயை தாண்டி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்ட வேண்டிய நிலை பதிவுத்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிதி ஆண்டு நிறைவால், மார்ச்சில் பத்திரப்பதிவு அதிகரிக்கும். நடப்பு ஆண்டில் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளதால், பதிவுக்கு வரும் பத்திரங்களின் எண்ணிக்கையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி, 20,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வருவாய் இலக்கை எட்ட சார் - பதிவாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தலையும் மீறி பத்திரப்பதிவு அதிகரித்தால் மட்டுமே, வருவாய் இலக்கை எட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

