வணிக மனைகள் விற்பனைக்கு ஏலத்தை நடத்துமா வீ.வாரியம்?
வணிக மனைகள் விற்பனைக்கு ஏலத்தை நடத்துமா வீ.வாரியம்?
UPDATED : மார் 22, 2024 12:47 PM
ADDED : மார் 22, 2024 12:47 AM
சென்னை:சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், வணிக மனைகள் விற்பனைக்காக, வீட்டுவசதி வாரியம் அறிவித்த ஏலத்தை திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், வீட்டுவசதி வாரியம் சார்பில் குடியிருப்பு திட்டங்கள், வணிக மனைகள், வணிக வளாகங்கள் திட்டங்கள் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில், குடியிருப்புகள் போன்று இல்லாமல், வணிக மனைகள் ஏலம் விடப்படுவது வழக்கம்.
ஆன்லைன் முறை
ஆனால், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களுக்கு பேசி வைத்து, அதிக தொகைக்கு ஏலம் எடுக்காமல் தடுப்பதால், வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, 'ஆன்லைன்' முறையில் ஏலம் நடத்த, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது.
இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
வீட்டுவசதி வாரியத்தில், காலியாக உள்ள வணிக மனைகளை விற்க, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது ஏலம் அறிவிக்கப்படும். கடந்த முறை நடந்த ஏலத்தில் விற்காத மனைகளுக்கு, தற்போது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் நகரங்களில் விற்காமல் உள்ள வணிக மனைகளுக்கு, சமீபத்தில் ஏலம் அறிவிக்கப்பட்டது. ஏலத்தை மார்ச் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
கட்டாய சூழல்
தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், வணிக மனைகளுக்கான ஏலத்தை திட்டமிட்டபடி நடத்துவதா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஏலம் அறிவிக்கப்பட்டும், விற்காத வணிக மனைகள் குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் உரிய அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

