ADDED : செப் 07, 2024 06:45 AM

விழுப்புரம்: த.வெ.க., மாநாடு தொடர்பாக போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கான விளக்கம், விழுப்புரம் டி.எஸ்.பி.,யிடம் நேற்று அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் துவங்கியுள்ள த.வெ.க.,வின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடத்த அனுமதி கோரி, அக்கட்சியின் நிர்வாகிகள் கடந்த 28ல், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அன்று மாலையே ஏ.டி.எஸ்.பி., திருமால் தலைமையில் போலீஸ் குழுவினர், மாநாடு நடத்த த.வெ.க.,வினர் தேர்வு செய்திருந்த இடத்தை பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து, மாநாட்டின் நிகழ்ச்சி நிரல், பாதுகாப்பு ஏற்பாடு, மாநாட்டிற்கு வருவோரின் எண்ணிக்கை உள்ளிட்ட 21 கேள்விகள் கேட்டு, விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷ், கடந்த 2ல் அக்கட்சி நிர்வாகிக்கு நோட்டீஸ் வழங்கினார்.
போலீசாரின் நோட்டீசிற்கு உரிய விளக்கத்துடன் கூடிய கடிதத்தை, அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர், விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷை நேற்று சந்தித்து அளித்தனர்.
இது குறித்து, டி.எஸ்.பி., சுரேஷ் கூறுகையில், “உயரதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, த.வெ.,க.,வினருக்கு உரிய பதில் தரப்படும்,” என்றார்.
விஜய் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் கடிதம், விழுப்புரம் எஸ்.பி., மூலம், சென்னை டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.