ADDED : பிப் 22, 2025 05:48 AM

திருநெல்வேலி: திசையன்விளை அருகே ஆனைகுடியில் எலக்ட்ரிக் டூவீலர் பேட்டரி வெடித்ததில் காயமுற்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆனைகுடியை சேர்ந்தவர் தேவதாஸ். கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் இடைச்சிவிளையைச் சேர்ந்த ஜான்சி பாப்பா 45, கோழிப்பண்ணையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
தேவதாசுக்கு சொந்தமான இரண்டு எலக்ட்ரிக் டூவீலர்கள் தோட்டத்தின் ஷெட்டில் நிறுத்தப்பட்டு இருந்தன. தோட்டத்தில் கோழி முட்டைகள் அடைகாக்க பயன்படும் இன்குபேட்டர் வைக்கப்பட்டுள்ள அறையில் இரண்டு பைக்குகளின் பேட்டரிகளும் சார்ஜ் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்தன.
பிப்.15 காலையில் அங்கு ஜான்சி பாப்பா சென்ற போது ஒரு பேட்டரி திடீரென வெடித்தது. இதில் அவர் படுகாயமுற்றார். திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்கு பிறகு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.
சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார். சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் விசாரிக்கின்றனர்.

