ஓட்டு போட வரிசையில் நின்ற பெண்ணுக்கு கத்திக்குத்து: முன்னாள் கணவர் கைது; இடைத்தேர்தலில் பரபரப்பு
ஓட்டு போட வரிசையில் நின்ற பெண்ணுக்கு கத்திக்குத்து: முன்னாள் கணவர் கைது; இடைத்தேர்தலில் பரபரப்பு
ADDED : ஜூலை 11, 2024 02:12 AM

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், ஓட்டு போடுவதற்காக வரிசையில் நின்றிருந்த பெண்ணை கத்தியால் குத்திய முன்னாள் கணவரை, போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த காணை ஒன்றியம், அடங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 55; கூலித் தொழிலாளி. இவரது முன்னாள் மனைவி கனிமொழி, 49. இவர், தற்போது திருவண்ணாமலை அடுத்த வேட்டவலத்தில் வசித்து வருகிறார். எனினும் கனிமொழிக்கு ஓட்டுரிமை அடங்குணம் கிராமத்தில் உள்ளது.
இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஓட்டு போடுவதற்காக கனிமொழி அடங்குணத்திற்கு வந்தார்.
விசாரணை
காலை 11:00 மணியளவில் டி.கொசப்பாளையத்தில் பூத் எண் 40ல் ஓட்டளிக்க வரிசையில் நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஏழுமலை, கனிமொழியிடம் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். அவரது அலறலை கேட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஏழுமலையை பிடித்து கஞ்சனுார் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், ஏழுமலை மீது இரு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கருத்து வேறுபாடு காரணமாக ஏழுமலையை பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வருவதால் ஏற்பட்ட ஆத்திரத்திலும் கனிமொழியை கத்தியால் குத்தியது தெரிய வந்தது.
கனிமொழி முதலுதவி சிகிச்சை பெற்று, தன் ஓட்டை பதிவு செய்தார். கத்திக்குத்து சம்பவத்தால், ஓட்டுச்சாவடியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மறியல்
விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று இடைத்தேர்தலையொட்டி பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. இத்தொகுதிக்கு உட்பட்ட காணை கிராமத்தில், விழுப்புரம் - திருக்கோவிலுார் மெயின் ரோடில், காலை 7:00 மணிக்கு டீ கடை, மருந்தகம், பால் கடைகள் இயங்கின.
தேர்தல் நடப்பதாலும், அருகே ஓட்டுச்சாவடி உள்ளதாலும், அனைத்து கடைகளையும் மூடுமாறு இன்ஸ்பெக்டர் வள்ளி உள்ளிட்ட போலீசார் கடைக்காரர்களிடம் கூறினர்.
அப்போது, 'டீ கடை, பால், மருந்து கடைக்கு மட்டும் அனுமதிக்க வேண்டும்' என்று கடைக்காரர்கள் கேட்டனர். 'கடை திறப்பதால் கூட்டம் சேர்கிறது; அதனால் மூட வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்வோம்' என போலீசார் மிரட்டினர்.
ஆத்திரமடைந்த கடைக்காரர்கள், பொதுமக்கள், மறியலில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, அத்தியாவசிய கடைகளை திறக்க அனுமதித்தனர்.
மணக்கோலம்
விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரைச் சேர்ந்தவர் அஜித்குமார், 28; பெங்களூரில் கார்கோ கம்பெனி நடத்தி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் சந்தியா, 27. இருவருக்கும் நேற்று திருவண்ணாமலை கோவிலில் திருமணம் நடந்தது.
நேற்று தொகுதியில் ஓட்டுப்பதிவு நடந்ததால், மதியம் 12:00 மணி அளவில் கப்பியாம்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பூத் எண் 219, 220ல், திருமண கோலத்தில் வந்து கணவன், மனைவி இருவரும் ஓட்டளித்தனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், 'தேர்தலில் ஓட்டளிப்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை. எங்களுக்கு திருமணம் முடிந்து, முதன்முதலாக இருவரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றனர்.
முதன் முறையாக ஓட்டு
விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் நித்யா, 21; முதுகலை பட்டதாரி. இவரது சகோதரி திவ்யா, 18, பி.டெக்., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் முதன்முறையாக, விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், 'முதன்முறையாக எங்கள் ஓட்டை பதிவு செய்துள்ளோம். எங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கு ஓட்டு போட்டோம். வெற்றி பெறும் வேட்பாளர், தொகுதியில் உள்ள மக்களின் குறைகளை கேட்டு நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது' என தெரிவித்தனர்.

