'மில்லட் மகாராணி' பட்டம் சூடும் போட்டியில் பங்கேற்க ஆர்வமுடன் பதிவு செய்யும் பெண்கள்
'மில்லட் மகாராணி' பட்டம் சூடும் போட்டியில் பங்கேற்க ஆர்வமுடன் பதிவு செய்யும் பெண்கள்
ADDED : ஏப் 20, 2024 10:44 PM
சென்னை:சிறுதானிய உணவு வகைகளை ஊக்கப்படுத்த, 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'ஆசிர்வாத் மில்லெட்ஸ்' நிறுவனம் இணைந்து, 'மில்லட் மகாராணி' பட்டம் வழங்கு வதற்காக மாபெரும் சிறுதானிய சமையல் போட்டியை, வரும் 28ம் தேதி சென்னை சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில் நடத்துகின்றன. இதில் பங்கேற்க பெண்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகம் உட்பட நாடு முழுதும், 'மில்லட்' எனப்படும் கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, சாமை, தினை உள்ளிட்ட சிறுதானிய உணவு வகை பயன்பாடு அதிகரித்து வருகிறது.
ஊட்டச்சத்து
மத்திய அரசு, ராணுவ வீரர்கள் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து திட்ட உணவு பட்டியலில், சிறுதானிய வகைகளை சேர்த்துள்ளது. தமிழக அரசு, ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டத்தை, நீலகிரி மாவட்டத்தில் சோதனை முயற்சியாக துவக்கிஉள்ளது.
சமையல்
சிறுதானிய உணவு சமைப்பதில் பெண்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், சமையல் திறனை உலகறிய செய்து, அனைவருக்கும் ஆரோக்கிய மந்திரத்தை பகிரவும், 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஆசிர்வாத் மில்லெட்ஸ் இணைந்து, 'மில்லட் மகாராணி' பட்டம் வழங்குவதற்கான போட்டியை, வரும் 28ம் தேதி சென்னை சேப்பாக்கம், கலைவாவனர் அரங்கில் நடத்துகின்றன.
இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் பெண்கள், தங்கள் வீட்டிலேயே சிறுதானியங்களில், சுவையான, 'டிரெண்டியான' உணவை சமைத்து எடுத்து வர வேண்டும்.
மதிப்பெண்
பிரபல சமையல் நிபுணர், 'செப்' தாமு மற்றும் சித்த மருத்துவ டாக்டர் கு.சிவராமன் ஆகியோரது குழுவினர், சிறந்த தானிய உணவை தேர்வு செய்வர். ஆசிர்வாத் மில்லட் மாவு வகையில், உணவு சமைத்து வருவோருக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை போட்டி நடக்கும். இதில், 'பெரும் நலம் தரும் சிறுதானியங்கள்' தலைப்பில் டாக்டர் சிவராமன் சிறப்புரை ஆற்றுகிறார்.
நிகழ்ச்சியில் பங்கேற்க பலர் ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர். நிகழ்ச்சிக்கு, 'கிப்ட் ஸ்பான்சராக' சத்யா நிறுவனம், 'அசோசியேட் ஸ்பான்சராக' மாம்பலம் ஐயர்ஸ் நிறுவனம், உணவு ஸ்பான்சராக மாதம்பட்டி பாகஷாலா நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளன.

