கல்லுாரி மாணவியரை தவறாக வழி நடத்திய வழக்கு பேராசிரியை நிர்மலாதேவிக்கு 35 ஆண்டுகள் சிறை ஸ்ரீவி., மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
கல்லுாரி மாணவியரை தவறாக வழி நடத்திய வழக்கு பேராசிரியை நிர்மலாதேவிக்கு 35 ஆண்டுகள் சிறை ஸ்ரீவி., மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
UPDATED : மே 01, 2024 12:35 AM
ADDED : ஏப் 30, 2024 11:32 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்:கல்லுாரி மாணவியரை தவறாக வழிநடத்தும் வகையில், மொபைல் போனில் பேசிய அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு, 35 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2.42 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டிஇருக்கும்.
கடந்த, 2018ல் கல்லுாரி மாணவியரை தவறாக வழி நடத்தும் வகையில், அலைபேசியில் பேசியதாக நிர்மலாதேவி, மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீது, அருப்புக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குற்றப்பத்திரிகை
பின், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு, தற்போது ஐ.ஜி.,யாக இருப்பவரும், அப்போதைய எஸ்.பி.,யுமான ராஜேஸ்வரி விசாரித்து, ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். பின், வழக்கு மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் கல்லுாரி செயலர், மாணவியர் உட்பட, 84 பேர் சாட்சியம் அளித்தனர்; 192 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கை ஏப்ரலுக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி, விசாரணை விரைந்து நடத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.
முருகன், கருப்பசாமி விடுவிக்கப்பட்டனர். நிர்மலா தேவியை குற்றவாளி என்று அறிவித்தார்.
இந்நிலையில், தண்டனை காலம் குறித்து வாதிடவும், நிர்மலா தேவி தரப்பில் சாட்சியம் அளிக்கவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வாய்ப்பு அளிக்க வேண்டும்.
அதுவரை தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று, நிர்மலா தேவி வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் கேட்டார். இதன்படி, நேற்று முன்தினம் தண்டனை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
நேற்று மதியம், 12:50 மணிக்கு மதுரை சிறையில் இருந்து நிர்மலா தேவி, நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அழுதார்
அவரின் வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் போலீசார் ஆஜராகினர். நிர்மலா தேவிக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க கோரி, அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகபட்ச தண்டனை வழங்க, அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், தீர்ப்பை தயார் செய்ய நீதிபதி பகவதி அம்மாள், தன் அறைக்கு சென்றார்.
நீதிமன்ற அறையில் இருந்த நிர்மலா தேவி, அழுதபடி இருந்தார்.
மாலை, 5:15 மணிக்கு, 310 பக்க தீர்ப்பை நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்தார். அதில், நிர்மலாதேவிக்கு ஐந்து பிரிவுகளில் 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும், 2.42 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
தீர்ப்பின் நகல் நிர்மலா தேவிக்கு வழங்கப்பட்டது. நேற்றிரவு, 7:30 மணிக்கு நிர்மலாதேவி மதுரை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தண்டனை விபரம்
இந்திய தண்டனைச் சட்டம் 370 - 1க்கு ஏழு ஆண்டுகள், 5,000 ரூபாய் அபராதம்
இந்திய தண்டனைச் சட்டம் 370 - 3க்கு 10 ஆண்டுகள் சிறை
பாலியல் தொழில் தடுப்புச் சட்டம் பிரிவு 5 - 1 ஏ - ன்படி, ஐந்து ஆண்டுகள் சிறை, 2,000 ரூபாய் அபராதம்
பாலியல் தொழில் தடுப்பு சட்ட பிரிவு 9ன்படி 10 ஆண்டுகள் சிறை, 10,000 ரூபாய் அபராதம்
தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67 படி 3 ஆண்டுகள் சிறை, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தண்டனைகளை நிர்மலா தேவி ஏக காலத்தில் அனுபவிக்கவும், 2018 ஏப்., 17 முதல் 2019 மார்ச் 20 வரையும், 2019 நவ., 25 முதல் டிச., 10 வரை சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலத்தில் கழிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
10 ஆண்டுகள்
ஏக காலத்தில் தண்டனை என்பதால், 10 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனையாகும்.
ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை கழித்தால் மீதி ஆண்டுகள் மட்டுமே சிறையில் இருக்க நேரிடும்.
மறு புலனாய்வு தேவை
நிர்மலா தேவி தரப்பில் 2018ல் ஆஜரான வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன்:
இந்த வழக்கில் நிர்மலா தேவி மட்டும் தண்டிக்கப்பட வேண்டியவர் அல்ல. அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதப்படி நிர்மலாதேவி ஒரு அம்பு என கூறுகிறார். அப்படி என்றால் அம்பை எய்தவர் யார். மாணவியரை நிர்மலா தேவி யாருக்காக அழைத்தார்.
சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி., ராஜேஸ்வரி முறையாக விசாரிக்கவில்லை. நிர்மலாதேவியை சிக்க வைத்து விட்டு உயர் பதவியில் இருந்த கருப்பு ஆடுகள் தப்பித்து விட்டனர். இந்த வழக்கு மீண்டும் புலனாய்வுக்கு எடுக்கப்பட்டு விசாரணை நடந்தால் அப்போது உயர் பதவியில் இருந்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவர்.
இவ்வாறு கூறினார்.
'பணம் மற்றும் பதவி ஆசையே குற்ற செயல்களுக்கு காரணம்'
தீர்ப்பில் நீதிபதி பகவதி அம்மாள் கூறியுள்ளதாவது:
நிர்மலா தேவி ஒரு பேராசிரியை. தன்னிடம் பயிலும் மாணவியரிடம் இது போன்று நடந்து கொண்டதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
மாணவியர்
சிறிய வயதினர். பேராசிரியர் சொல்கிறாரே, மார்க்கில் கை வைத்து விடுவாரோ
என்ற பயத்தில் அவர் சொல்வதற்கு இணங்கி இருந்தால் நிலைமை என்னவாகி
இருக்கும்?
எனவே, இது போன்ற குற்றங்கள் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டது போல சமுதாய சீர்கேட்டையே விளைவிக்கும்.
மாணவியர்
இளைய தலைமுறையினர். அவர்கள் வாழ்க்கையுடன் விளையாடுவதை நிச்சயமாக
அனுமதிக்க முடியாது. நிர்மலா தேவி, 2 பெண் குழந்தைகளின் தாய். மாணவியரிடம்
இவ்வாறு பேசுவதால் அவர்களின் வாழ்க்கையில் பிரச்னை ஏற்படும் என்பது
அவருக்கு தெரியாமலா இருக்கும்?
அவரது பண ஆசை மற்றும் பதவி ஆசை தான்
அவரை இக்குற்ற செயலை செய்ய வைத்து உள்ளது. அவரது செயலை, மாணவியர் வெளியில்
சொல்லாமல் இருந்திருந்தால், பிற மாணவியரிடமும் இது போல செய்து அவர்களை தன்
வலையில் சிக்க வைத்து, அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கவும் செய்திருப்பார்.
இது போல, மாணவியரின் வாழ்க்கையை சீரழிப்பதை எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் புற்றுநோய் போன்ற குற்றங்களை சரிப்படுத்தும் தீர்ப்பு
படித்தவர்
என்பதாலும், குழந்தைகள் இருப்பதாலும் தண்டனையில் கருணை காட்டும்படி
நிர்மலா தேவி தரப்பில் கூறப்பட்டது. ஆனால், புற்று நோய் போல் உள்ள இது
போன்ற குற்றங்களை, இந்தியாவில் சரி செய்ய அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென
அரசு தரப்பில் கூறினோம்.
இதில் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை
வழங்கலாம் என்ற நிலையில் தற்போது, 10 ஆண்டு சிறைத் தண்டனை மட்டுமே
வழங்கப்பட்டுள்ளது. பல்கலை அலுவலர்கள் பிறழ் சாட்சியானதால், மற்ற இருவரும்
விடுதலை ஆகியுள்ளனர். வாரமிருமுறை இதழ் செய்தியையும், அரசு தரப்பு ஆவணமாக
தாக்கல் செய்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். நேர்மையாக
விசாரணை நடந்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
- சந்திரசேகரன், அரசு வழக்கறிஞர்