21 உள்ளாட்சிகளில் குடிநீர், சாக்கடை வசதி உலக வங்கி உதவியுடன் பணிகள் துவக்கம்
21 உள்ளாட்சிகளில் குடிநீர், சாக்கடை வசதி உலக வங்கி உதவியுடன் பணிகள் துவக்கம்
ADDED : பிப் 24, 2025 02:23 AM
சென்னை: 'தமிழகத்தில், 12 மாநகராட்சிகள் மற்றும் ஒன்பது நகராட்சிகளில், 2030க்குள் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களை, உலக வங்கி உதவியுடன் செயல்படுத்த பணிகள் துவக்கப்பட்டுள்ளன' என, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சிகள் தரம் உயர்த்தப்படும் நிலையில், அவற்றில் அடிப்படை வசதிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் வைத்து, நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், 'தமிழக பருவ நிலை மாற்ற சமாளிப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்' உருவாக்கப்பட்டது.
உலக வங்கி உதவியுடன் இத்திட்டத்தை, 3,838 கோடி ரூபாயில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இத் திட்டத்துக்கு, 2023ல் உலக வங்கி ஒப்புதல் அளித்தது.
இதன்படி, திட்ட மதிப்பில், 2,940 கோடி ரூபாயை உலக வங்கியும், 637 கோடி ரூபாயை உள்ளாட்சி அமைப்புகள் கடன் வாயிலாகவும், திரட்ட முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தை, 2030க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழக பருவநிலை மாற்ற சமாளிப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 12 மாநகராட்சிகள், ஒன்பது நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில், ஏழு நகரங்களில், 24 மணி நேர குடிநீர் வினியோகத்துக்கான திட்டங்கள்; ஏழு நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்; ஏழு நகரங்களில், இரண்டு திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.
குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டு இறுதிக்குள் பணிகள் துவங்கப்பட்டு, 2030க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.