ADDED : ஆக 24, 2024 05:21 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் சுங்க வரி செலுத்த நின்றிருந்த வாகனம் மீது லாரி மோதியதில் டோல்பிளாசா ஊழியர் உடல் நசுங்கி இறந்தார்.
பண்ருட்டி அடுத்த ராசாபாளையத்தை சேர் ந்தவர் கணேசன், 31; விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் மணிகண்டன், 40; விக்கிரவாண்டி டோல்பிளசா ஊழியர்களான இவர்கள் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, டோல் பிளாசாவில் சென்னை-திருச்சி மார்க்கத்தில் 4வது லேனில் காருக்கு வரி வசூலிக்க டிரைவரிடம் விசாரித்து கொண்டிருந்தனர்.
காருக்கு பின்னால், டிஎன்-37-டிஜெ-9045 பதிவெண் கொண்ட ஈச்சர் லாரி வந்து நின்றது. அப்போது சென்னை யில் இருந்த வேகமாக வந்த டிஎன்-04-வி-4176 பதிவெண் கொண்ட முட்டை லாரி கட்டுப்பாட்டை இழந்து, ஈச்சர் லாரியின் பின்னால் மோதியது.
அதில, ஈச்சர் லாரி சுங்க வரி செலுத்த நின்றிருந்த கார் மீது மோதி, அருகில் நின்றிருந்த டோல்பிளாசா ஊழியர்கள் கணேசன், மணிகண்டன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் கணேசன் இறந்தார். மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதனைத் தொடர்ந்து, கணேசன் உறவினர்கள் நஷ்டஈடு கோரியும், அவரது மனைவிக்கு வேலை கேட்டு விக்கிரவாண்டி பேரூராட்சி சேர்மன் அப்துல்சலாம் தலைமையில் டோல்பிளாசா முன் கூடினர்.
சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், கணேசன் தரப்பினர் மற்றும் டோல்பிளாசா அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கணேசன் இறுதிசடங்கிற்கு ரூ.2 லட்சம் மற்றும் கணேசன் மனைவி அஞ்சலிதேவிக்கு பணி ஆணையை டோல்பிளாசா நிர்வாகம் வழங்கியது.
அதனையேற்று பகல் 1:20 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். விபத்து ஏற்படுத்திய முட்டை லாரி டிரைவர் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காங்கேயத்தை சேர்ந்த முத்துக்குமார், 29; மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.