'டொமேட்டோ சாஸில்' புழு; சுற்றுலா பயணியர் அதிர்ச்சி
'டொமேட்டோ சாஸில்' புழு; சுற்றுலா பயணியர் அதிர்ச்சி
ADDED : ஏப் 28, 2024 11:14 PM

குன்னுார் : சென்னையை சேர்ந்த துணை நடிகர் விஜய் விஷ்வா, அட்டகத்தி, பிகில், மாயநதி உட்பட பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். இவர் தன் குடும்பத்தினர் உட்பட, 10 பேருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார்.
நேற்று மதியம் குன்னுாரில் உள்ள, '180 டிகிரி மெக்கைவர் வில்லா' ஹோட்டலில் இந்த குழுவினர், பிரைட் ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்ட போது, டொமேட்டோ சாஸில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பயனில்லை. தொடர்ந்து, இவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட 'வீடியோ' பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் விஷ்வா கூறுகையில், ''டொமேட்டோ சாஸில் புழுக்கள் இருந்தது குறித்து நிர்வாகத்திடம் தெரிவித்த போது, உரிய பதில் அளிக்கவில்லை. உணவு பாதுகாப்பு துறைக்கு போன் செய்த போதும் பயனில்லை. இதை சாப்பிட்ட இருவர் வாந்தி எடுத்தனர். இதுபோன்ற ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை முழுமையாக சோதனை செய்ய வேண்டும்,'' என்றார்.
ஹோட்டல் மேலாளர் டொமினிக் சேவியர் கூறுகையில், ''இவர்கள் சாப்பிட்ட பிரைட் ரைஸ் உணவுக்கு வழங்கப்பட்ட டொமேட்டோ சாஸ் மார்க்கெட்டில் வாங்கப்பட்டது. அதில், புழு இருந்தது சுற்றுலா பயணியர் உட்கொண்ட போது தான் தெரிய வந்தது. அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டோம்,'' என்றார்.

