தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்
தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்
ADDED : பிப் 21, 2025 08:56 PM
தமிழக கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தொடர்ந்து மனு மீது, விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதில், கவர்னர் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த 10ல், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, கவர்னர் தரப்பு மற்றும் தமிழக அரசு தரப்பு, தங்களுடைய இறுதி வாதத்தை, எழுத்துப்பூர்வமாக கோர்ட்டில் தாக்கல் செய்யலாம் என வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஏற்கனவே, தமிழக அரசு தரப்பில் இறுதி வாதம் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், 'இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கி இருக்கும் அதிகாரங்களுக்கு உட்பட்டே, மாநில அரசுகள் இயற்றும் சட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளன. இந்த விவகாரத்தில், மாநில அமைச்சரவை கூடி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கவர்னர் கட்டுப்பட வேண்டியதில்லை. மேலும், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் அதை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பும் அதிகாரமும் கவர்னருக்கு உள்ளது. தமிழக அரசு ஒப்புதலுக்காக அனுப்பிய மசோதாக்களை, ஜனாதிபதிக்கு, தமிழக கவர்னர் அனுப்பியதில் எவ்வித விதிமீறலும் இல்லை. ஏற்கனவே அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது, இனி ஜனாதிபதியே முடிவெடுப்பார்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.
கோர்டில் நடந்த வாதத்தில் சொல்லப்பட்ட விஷயங்களையே தனித்தனியாக எழுத்துப்பூர்வ வாதங்களிலும் கவர்னர் தரப்பு தெரிவித்திருக்கிறது.
இதையடுத்து, இவ்வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-டில்லி சிறப்பு நிருபர்-