பள்ளி சிறுமியரிடம் சில்மிஷம்
உளுந்துார்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அடுத்த கீழப்பாளையம் தண்டபாணி, 57. சில தினங்களுக்கு முன் ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதேபோன்று, எலவனாசூர்கோட்டை அடுத்த சுந்தரவாண்டி முகமது யாகூப், 58. ஆறாம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இரு வேறு புகார்களில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் தண்டபாணி, முகமது யாகூப்பை கைது செய்தனர்.
சீண்டிய தாய்மாமனுக்கு 'கம்பி'
ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்த, 13 வயது சிறுமி, ஏழாம் வகுப்பு படிக்கிறார். அவர், தாத்தா வீட்டுக்கு சென்றபோது, அவரது தாய்மாமனான, 47 வயது தொழிலாளி, பாலியல் தொந்தரவு செய்து வந்தார். சிறுமியின் பெற்றோர், ஆத்துார் மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். விசாரித்த போலீசார், போக்சோ வழக்குப்பதிந்து, தொழிலாளியை நேற்று கைது செய்தனர்.
சத்துணவு அமைப்பாளர் கைது
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், 59, பள்ளி சத்துணவு அமைப்பாளராக உள்ளார். பள்ளியில் படிக்கும், 13 வயது மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். அப்பள்ளியில் நடந்த பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்த அதிகாரியிடம், இது குறித்து மாணவி தெரிவித்தார். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜோதி விசாரணை நடத்தியதில், புகார் உறுதியானதால், மகளிர் போலீசார் சரவணனை போக்சோவில் கைது செய்தனர்.

