சில்மிஷ ஆசிரியருக்கு 'காப்பு'
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே கிராமத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக அறிவியல் ஆசிரியராக, நெடுக்கன்கரையைச் சேர்ந்த ராமன், 37, பணிபுரிகிறார். இவர், எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரிடம், ஆறு மாதங்களுக்கும் மேலாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். நுாலகத்திற்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றுள்ளார். மாணவி, அவரது தாய் போலீசில் அளித்த புகாரில், ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீசார், போக்சோவில் ராமனை நேற்று கைது செய்தனர்.
வேன் டிரைவருக்கு வலை
திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், பகவதிபுரத்தைச் சேர்ந்த முகமது அலி, 37, பள்ளி வேன் டிரைவராக உள்ளார். பெல் வளாகத்தில் பெண்கள் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவியிடம், இரண்டு ஆண்டுகளாக முகமது அலி நெருங்கிப் பழகி உள்ளார். மனைவியை விவாகரத்து செய்து, மாணவியை திருமணம் செய்வதாக ஆசை காட்டி, மாணவியை வன்கொடுமை செய்துள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் திருவெறும்பூர் மகளிர் போலீசார், முகமது அலி மீது போக்சோ வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
4 பேர் மீது வழக்கு பதிவு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, திருமணமாகி இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விராலிமலை சமூகநல விரிவாக்க அலுவலர் வெள்ளிமலர் விசாரித்தார். இது உறுதியானதால், 17 வயது பெண்ணை திருமணம் செய்த விராலிமலையைச் சேர்ந்த திருப்பதி, 21, அவரது உறவினர்கள் மூக்கன், 60, ராணி, 50, முத்து, 62, ஆகிய நான்கு பேர் மீது இலுப்பூர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.