'தோட்டக்கலை பயிர்களுக்கு மானியம் பெற ஆன்லைனில் தான் பதிய வேண்டும்!'
'தோட்டக்கலை பயிர்களுக்கு மானியம் பெற ஆன்லைனில் தான் பதிய வேண்டும்!'
ADDED : ஆக 09, 2024 01:37 AM

சென்னை:தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கான மானியம் பெற, ஆன்லைனில் மட்டுமே விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என, வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.
மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள், வாசனை பொருட்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பொருட்கள் சாகுபடியை அதிகரிக்க, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நடப்பாண்டு, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
பயனாளிகளை தோட்டக்கலை துறையின், www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவே தேர்வு செய்ய வேண்டும்
திட்ட பலனை பெற, தேர்வாகும் விவசாயிகளுக்கு சொந்த நிலம் அல்லது 10 ஆண்டு குத்தகை பதிவு செய்யப்பட்ட நிலம் இருக்க வேண்டும்
விவசாயிகளுக்கான பண பரிவர்த்தனை, மின்னணு தீர்வை எனப்படும் இ.சி.எஸ்., மற்றும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் டி.பி.டி., முறையில் வழங்க, தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில், பயனாளிகள் கணக்கு வைத்திருக்க வேண்டும்
தேர்வு செய்யப்பட்ட பயனாளி, மத்திய அரசின் தனிப்பட்ட அடையாள அமைப்பு திட்டத்தில் பதிவு செய்து, வங்கி கணக்குடன், ஆதார் எண்ணை இணைத்துஇருக்க வேண்டும்
விவசாயிகள் குறித்த காலத்தில் சாகுபடி மேற்கொள்ளாவிட்டால், அதற்கான அனுமதியை ரத்து செய்து, முன்னுரிமை அடிப்படையில், புதிய பயனாளியை தேர்வு செய்ய வேண்டும்
நடவு பொருட்களை அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இருந்து பெற வேண்டும். அங்கு இருப்பு இல்லாவிட்டால், மற்ற அரசு பண்ணைகள், வேளாண் பல்கலை, வேளாண் அறிவியல் நிலையங்களில் இருந்து பெற வேண்டும்
திட்டங்களை செயல்படுத்தியது முதல் பல்வேறு காலகட்டங்களில், 'ஜியோடேக்' எனப்படும் புவியியல் குறியீடுடன் கூடிய போட்டோக்களை, வட்டார தோட்டக்கலை அலுவலர்கள் எடுக்க வேண்டும்.
இவை உட்பட, 28 வழிகாட்டு நெறிமுறைகளை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.
அரசு அலுவலர்களின் வேலைப்பளுவை குறைக்க, காகிதம் இல்லாத அலுவலக நடைமுறையை, மற்ற துறைகளில் பயன்படுத்தலாம். வேளாண் துறையில் அவ்வாறு செயல்படுத்த முடியாது. மலைப்பிரதேசங்களில் காய்கறிகள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்கு மொபைல் போன், இணையதள வசதிகள் இல்லாமல், பல விவசாயிகள் உள்ளனர். மேலும், ஆன்லைனில் கேட்கப்படும் பல கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் சிக்கல் ஏற்படுவதால், விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடிவதில்லை.
எனவே, அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில், ஆன்லைன் வாயிலாக மட்டுமின்றி, நேரடியாக விண்ணப்பம் பெற்றும் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான், தகுதியான விவசாயிகளுக்கு திட்ட பலன்கள் சென்று சேரும்.
- பி.ஆர்.பாண்டியன்
தலைவர், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு.