ADDED : மார் 01, 2025 01:48 AM

சென்னை: பட்டப் பகலில், தாசில்தார் அலுவலகம் அருகே பேட்மின்டன் பயிற்சியாளர், மர்ம கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
சென்னை, அம்பத்துார் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு, 35. பேட்மின்டன் பயிற்சியாளரான, இவர் தந்தையுடன் சேர்ந்து கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.
திருமணமான இவர் மனைவி, மகளை பிரிந்து வசித்து வந்தார். அம்பத்துார் தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள பேட்மின்டன் அரங்கில், தினமும் பயிற்சியில் ஈடுபடுவார்.
நேற்று மாலை, 3:15 மணியளவில், பயிற்சி முடித்து, மொபைல்போனில் பேசியபடி அரங்கில் இருந்து வெளியே வந்தபோது, அங்கு ஆட்டோவில் காத்திருந்த நான்கு பேர் கும்பல், அவரை சரமாரியாக வெட்டி தப்பியது.
உடல் முழுதும் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
இது குறித்து விசாரித்த அம்பத்துார் போலீசார், தினேஷ் பாபுவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், ரியல் எஸ்டேட் தொழில் போட்டியால் கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.