அலர்ஜி மருந்து ஊசியில் போதை ஏற்றும் இளசுகள்; சுகாதார துறை விழிப்பது அவசியம்
அலர்ஜி மருந்து ஊசியில் போதை ஏற்றும் இளசுகள்; சுகாதார துறை விழிப்பது அவசியம்
ADDED : மார் 05, 2025 12:42 AM

கள்ளச்சாராயம், கஞ்சாவுக்கு அடுத்தபடியாக இளைஞர்களிடம் போதை ஊசி பழக்கம் தலை துாக்கியுள்ளது. இதில், அலர்ஜி மருந்தை போதைக்கு பயன்படுத்தும் புதிய முறையை கையில் எடுத்துள்ளனர்.
மது, கஞ்சா போதைக்கு அடிமையாகி வரும் தமிழக இளைஞர்கள், கூடுதல் போதைக்காக, துாக்கம் மற்றும் வலி நிவாரண மருந்துகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதில், புது வரவாக ஒவ்வாமை எனப்படும் அலர்ஜிக்கு பயன்படுத்தும், 'அவில்' ஊசி மருந்துகளை, இளைஞர்கள் போதைக்கு அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் விலை குறைவு. மருந்து கடைகளில், பலமடங்கு விலைக்கு இதை இளைஞர்களிடம் விற்கின்றனர். இதை பயன்படுத்தும் இளைஞர்கள், தன் நிலை மறந்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
பெங்களூரு, கோவா, கேரளா போன்ற பிற மாநிலங்களை போல, தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் இந்த செயல் அதிகரித்திருப்பது சமூக ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர்கள் பரிந்துரையின்றி ஊசி மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என்பதை தமிழக சுகாதாரத்துறை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மீறுவோரின் உரிமம் ரத்து, குற்றவியல் நடவடிக்கை என்பதை உறுதி செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நமது நிருபர் -