ADDED : அக் 02, 2024 03:13 AM
சென்னை:பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்தது தொடர்பாக, நாகை மாவட்டத்தில், ஆறு ஊராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
'பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா' என்ற பெயரில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் வீடு கட்ட, மத்திய அரசு சார்பில், 2.77 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், 2016 - 2020 வரையிலான காலகட்டத்தில், பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில், 146 பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியில், 1 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக, அம்மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம், ஆதமங்கலம், வலிவலம், கோவில் கண்ணாப்பூர், தெற்கு பனையூர், கொடியாலத்தூர் என, ஆறு ஊராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று சோதனை நடத்தினர்.

