பொங்கல் தொடர் விடுமுறையால் 10 கோடி யூனிட் சரிந்த மின் நுகர்வு
பொங்கல் தொடர் விடுமுறையால் 10 கோடி யூனிட் சரிந்த மின் நுகர்வு
ADDED : ஜன 19, 2025 02:46 AM
சென்னை:தமிழகம் முழுதும் வீடு உட்பட அனைத்து பிரிவுகளிலும், ஒரு நாள் அதாவது, 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சார அளவு, மின் நுகர்வு எனப்படுகிறது. தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ள தமிழக மின் நுகர்வு, கோடை காலத்தில் அதிகரிக்கிறது. 2024 ஏப்ரல், 30ல், 45.43 கோடி யூனிட்களாக உச்சத்தை எட்டியது. இதுவே, இதுவரை அதிக அளவாக உள்ளது.
இந்தாண்டு துவங்கியதில் இருந்து, கடும் பனிப்பொழிவால் வீடுகளில், 'ஏசி' சாதன பயன்பாடு குறைந்துள்ளது. இதனால், தினசரி மின் நுகர்வு சராசரியாக, 33 கோடி யூனிட்களாக உள்ளது. ஜன. 8ம் தேதி, 35 கோடி யூனிட்களாக இருந்தது. இதுவே, இந்தாண்டின் உச்ச அளவாக உள்ளது.
அரசு அலுவலகங்களுக்கு, ஜன. 14ம் தேதி முதல் நேற்று வரை விடுமுறை. பல தனியார் அலுவலகங்களுக்கும் விடுமுறையாக இருந்தது.இதனால், 14ம் தேதி மின் நுகர்வு, 25.84 கோடி யூனிட்களாவும், அடுத்த நாள், 24.58 கோடி யூனிட்களாகவும் சரிவடைந்தது. ஜன. 8ம் தேதியுடன் ஒப்பிடும் போது, இந்த இரண்டு நாட்களில் முறையே மின் நுகர்வு, 9.16 கோடி யூனிட்கள்; 10.42 கோடி யூனிட்கள் குறைந்துள்ளது. ஜன. 16ல், 26.61 கோடி யூனிட், நேற்று முன்தினம், 30 கோடி யூனிட்கள் என்றளவிலும் மின் நுகர்வு இருந்தது.

