தொப்புள்கொடி வெட்டிய விவகாரம் மருத்துவமனைக்கு 10 நாள் தடை
தொப்புள்கொடி வெட்டிய விவகாரம் மருத்துவமனைக்கு 10 நாள் தடை
ADDED : அக் 24, 2024 01:46 AM
சென்னை:குழந்தையின் தொப்புள் கொடியை வெட்ட, 'யு டியூபர்' இர்பானை அனுமதித்த, சென்னை தனியார் மருத்துவமனை, 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல யு டியூபர் இர்பான், தன் மனைவியை பிரசவத்துக்காக, கடந்த ஜூலை மாதம் சோழிங்க நல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
பிரசவத்தின்போது, அறுவை சிகிச்சை அரங்கில் இருந்த அவர், டாக்டர்களின் உதவியுடன் குழந்தை - தாயின் இணைப்பு பாலமான தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டினார்.
இதை, வீடியோவாக பதிவு செய்து, தன் யு டியூப் பக்கத்தில் வெளியிட்டார். இதை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்தனர்.
இது, மருத்துவ துறையின் விதிகளை மீறிய செயல் என்றும், இதற்கு டாக்டர்கள் அனுமதித்தது சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் குற்றம்சாட்டபட்டது.
இதையடுத்து, மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணித் துறை சார்பில், காவல் துறையிடம் புகார் அளித்ததுடன், துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டது.
மேலும், மருத்துவமனைக்கும், இர்பானுக்கும் தனித்தனியே, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
தனியார் மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கம் ஏற்கும்படி இல்லை எனக் கூறி, இன்று முதல் 10 நாட்களுக்கு அம்மருத்துவமனை செயல்பட தடை விதித்து, மருத்துவ சேவைகள் இயக்குனர் உத்தரவிட்டார். மேலும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
தொடர் சிகிச்சையில் உள்ள கர்ப்பிணியரை தவிர, மற்ற உள்நோயாளிகள், புற நோயாளிகள் அனைவருக்கும் 10 நாள்களுக்கு சிகிச்சையளிக்க தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

