10 லட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடிக்கு இலக்கு
10 லட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடிக்கு இலக்கு
ADDED : செப் 24, 2024 07:15 AM
சென்னை : நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு மாற்றாக, மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகளுக்கு உரிய வருவாய் கிடைத்து வருகிறது. சத்துமாவு உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட உணவு வகைகள், கோழி தீவனம், எத்தனால் தயாரிப்பு உள்ளிட்டவற்றிற்கு மக்காச்சோளம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
மக்காச்சோளத்தின் தேவை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தி போதுமானதாக இல்லை. எனவே, மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிப்பதற்கான பணிகளில், வேளாண் துறை கவனம் செலுத்தி வருகிறது.
மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படும் 18 மாவட்டங்களில், சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டம், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிதியில், 6,000 ரூபாய் மதிப்பிலான மக்காச்சோள விதைகள், திரவ உயிர் உரங்கள், இயற்கை உரங்கள், நானோ யூரியா போன்வற்றை, 50,000 விவசாயிகளுக்கு வழங்கும் பணி துவங்கியுள்ளது.
நடப்பாண்டு மக்காச்சோளம் சாகுபடி, 10.1 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மக்காச்சோளம் சாகுபடிக்கு மாவட்ட வாரியாக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக பெரம்பலுார் மாவட்டத்தில், 1.63 லட்சம் ஏக்கர்; துாத்துக்குடியில், 1.26 லட்சம்; சேலத்தில் 97,903; திண்டுக்கல் 72,590; கடலுாரில், 60,591 ஏக்கரில் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.