UPDATED : ஜூலை 05, 2024 11:47 PM
ADDED : ஜூலை 05, 2024 11:34 PM

சென்னை : கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம்; இவ்வளவு தொகை எப்படி வழங்க முடியும்?' என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதை மறுபரிசீலனை செய்வது குறித்து கருத்து தெரிவிக்குமாறு, அரசு தரப்புக்கு உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்து, 65 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், சிகிச்சை பெறுபவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், 'வெல்பேர் பார்ட்டி' என்ற கட்சியின் மாநிலச் செயலர் முகமது கவுஸ் தாக்கல் செய்த மனு:
கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல்; அவர்கள் மீது அரசு இரக்கம் கொள்ள தேவையில்லை. விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு தான் நிவாரணம் வழங்க வேண்டும்; சட்டவிரோத செயல்களை செய்பவர்களுக்கு வழங்கக் கூடாது.
தீ விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் அல்லது வேறு விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு, குறைவான இழப்பீடு தொகையை அரசு வழங்குகிறது.
ஆனால், கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு அதிக தொகை வழங்கப்படுகிறது. எந்த அடிப்படையில் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை
எனவே, கள்ளச்சாராயம் குடித்தவர்களை, பாதிக்கப்பட்டவர்களாக கருதக் கூடாது; அவர்களுக்கு இழப்பீடு மறுக்க வேண்டும்.
கள்ளச்சாராயம் குடிப்பவர்கள், நாட்டுக்காக உயிரை இழந்த சுதந்திரப் போராட்ட வீரர்களோ அல்லது மக்களுக்காக தியாகம் செய்த சமூக சேவகர்களோ அல்ல. அதனால், அரசு அறிவித்துள்ள இழப்பீட்டை ரத்து செய்ய வேண்டும்.
இதுகுறித்து, கடந்த மாதம் 20ம் தேதி அரசுக்கு மனு அனுப்பினேன்; பதிலும் இல்லை, நடவடிக்கையும் இல்லை. எனவே, இழப்பீடு வழங்கும் அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார். பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் அடங்கிய முதல் பெஞ்ச் முன், மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுக்களோடு, இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கலாம் என அரசு தரப்பில் கோரிக்கை வைத்தனர். நீதிபதிகள் அதை ஏற்கவில்லை. இந்த மனுதாரர் கேட்டிருக்கும் விஷயமே வேறு என்பதால், இதை தனியாக விசாரிக்கப் போவதாக தெரிவித்தனர்.
'கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம்; இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்?' என, அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், 'அவர்களை ஏன் ஊக்குவிக்க வேண்டும்; 10 லட்சம் ரூபாய் என்பது அதிகம். விபத்தில் ஒருவர் இறந்தால், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கலாம்.
'எனவே, நிவாரணம் குறித்த முடிவை மறுபரிசீலனை செய்வது குறித்து, அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டும்' என, அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.