ADDED : மே 27, 2025 12:26 AM
கடந்த மூன்று நாட்களாக கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி அருகே கூடாஞ்சேரியைச் சேர்ந்த விஜி சந்திரன்,- ஷீபா தம்பதியினரின் மகன்களான நிதின் 13, இவின் 11, ஆகிய இருவரும் அரக்கல்படித்தோடு என்ற இடத்தில் உள்ள ஓடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று காரணமாக மரக்கிளை உடைந்து மின்கம்பியில் விழுந்ததில், மின்கம்பி அறுந்து சிறுவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஓடைக்குள் விழுந்தது. தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சிறுவர்கள் இருவரும் இறந்தனர்.
இதேபோல், கோழிக்கோடு, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களிலும் மழை பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக மழை பாதிப்புக்கு, 10 பேர் பலியாகினர்.
