'கொகைன்' கடத்திய வழக்கில் பிரேசில் ஆசாமிக்கு '10 ஆண்டு'
'கொகைன்' கடத்திய வழக்கில் பிரேசில் ஆசாமிக்கு '10 ஆண்டு'
ADDED : மார் 18, 2024 12:40 AM
சென்னை: பிரேசில் நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில், 'கொகைன்' கடத்திய வழக்கில், பிரேசில் நாட்டை சேர்ந்தவருக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாலோவில் இருந்து, சென்னைக்கு துபாய் வழியாக வரும், 'எமிரேட்ஸ்' விமானத்தில், போதைப்பொருள் கடத்தி வருவதாக, தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு, 2018 மே 12ல் தகவல் கிடைத்தது.
அடிமைப்படுத்தும்
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில், 'எமிரேட்ஸ்' விமானத்தில், 'கொகைன்' கடத்தி வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த டயஸ் கோயிம்ப்ரா லுாரென்கோஅர்மாண்டோ ரூய், 65, என்பவர் கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜுலியட் புஷ்பா முன் விசாரணைக்கு வந்தது.
தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் என்.பி.குமார், ஏ.செல்லத்துரை ஆஜராகினர்.
நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:
'கொகைன்' மனிதரின் மூளையை மிகவும் அடிமைப்படுத்தும் போதைப்பொருள் என, மருத்துவ சான்றுகள் கூறுகின்றன.
இவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது, நரம்பியல் கடத்தியான, 'டோபமைன்' அளவை அதிகரிக்கிறது.
மேலும் நரம்பியல் பிரச்னை, நினைவாற்றல் இழப்பு, கவனமின்மை போன்ற மோசமான உடல் சார்ந்த குறைபாடுகளுக்கும், 'கொகைன்' வழிவகுக்கிறது.
குற்றம் நிரூபணம்
சமூகத்தில் கொடிய விளைவை ஏற்படுத்தும், இதுபோன்ற போதைப்பொருள் கடத்தலை தடுக்கவே, சட்டம் இயற்றப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய நபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது.
எனவே, கைதான டயஸ் கோயிம்ப்ரா லுாரென்கோ அர்மாண்டோ ரூய்க்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார்.

