மதுரை ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 100 கேமராக்கள் 'அவுட்'
மதுரை ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 100 கேமராக்கள் 'அவுட்'
ADDED : மே 09, 2024 07:09 AM

மதுரை : திடீர் இடி, மழையால் மதுரை தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தின் வெளிப்பகுதியில் இருந்த நுாறு கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தன.
மதுரை மருத்துவ கல்லுாரியில் ஜூன் 4ல் மதுரை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. தேர்தல் முடிந்ததும் 1573 ஓட்டுச்சாவடிகளில் இருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாக்கப்படுகிறது. இந்த அறையின் ஒரு சாவி கருவூலத்திலும், மற்றொரு சாவி தேர்தல் அதிகாரியான கலெக்டர் வசமும் பாதுகாப்பாக உள்ளது.
மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ட்ராங்க் ரூமில் மத்திய ரிசர்வ் படையினரும், அடுத்த வளையத்தில் தமிழக போலீசார், நுழைவு பகுதி உட்பட வெளிப்பகுதியிலும் நுாற்றுக்கணக்கான போலீசார் மூன்று ஷிப்டுகளில் பணியாற்றுகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசியல் கட்சியினரும் மூன்று ஷிட்டுகளில் கண்காணிக்க அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கென பிரத்யேகமாக டிவிக்கள் நிறுவப்பட்டுள்ளன.
எந்நேரமும் குறைந்தது 10 பேராவது இருந்து கண்காணிக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் மேலாக 260 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென இடியுடன்கூடிய மழை பெய்தது. இந்த அதிர்வால் நுழைவிடம், வெளிப்பகுதியில் இருந்த 150 கேமராக்களில் நுாறு கேமராக்கள் வரை செயலிழந்தன. உடனே கலெக்டர் உட்பட தேர்தல் அதிகாரிகள் தொழில்நுட்ப ஊழியர்களுடன் சென்று சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதிகாரிகள் கூறுகையில், ''இடி விழுந்ததில் வெளிப்பகுதியில் ஒரே லைனில் இணைப்பில் இருந்த கேமராக்கள் செயலிழந்தன. ஒரு மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது'' என்றனர்.