பயிர் கணக்கெடுப்பில் 100 சதவீதம் மாணவர்கள் வேளாண் துறை திட்டவட்டம்
பயிர் கணக்கெடுப்பில் 100 சதவீதம் மாணவர்கள் வேளாண் துறை திட்டவட்டம்
ADDED : நவ 20, 2024 10:42 PM
சென்னை:நடப்பு பருவத்தில், 100 சதவீதம், 'டிஜிட்டல்' பயிர் கணக்கெடுப்பு பணி மாணவர்கள் வாயிலாகவே நடத்தப்பட உள்ளதாக, வேளாண் துறை தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில், 2022 முதல் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து கிராமங்களிலும், 2023 மற்றும் 2024ம் ஆண்டு காரிப் பருவத்தில், வருவாய் துறை வாயிலாக, 'டிஜிட்டல்' பயிர் கணக்கீடு நடத்தப்பட்டது; ஆனாலும், அது முழுமையாக நடத்தப்படவில்லை.
'டிஜிட்டல்' முறையில், விவசாயிகளின் விபரம், அவர்கள் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் விபரங்கள் பராமரிக்கப்படும்.
நலத்திட்டங்களை பெற, ஒவ்வொரு முறையும் விபரங்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்குவதை தவிர்ப்பது தான், வேளாண் அடுக்கு திட்டத்தின் முக்கிய நோக்கம்.
விவசாயிகள் எளிதாக பயிர் கடன் உள்ளிட்டவற்றை வங்கிகளில் பெறுவதற்கு, வேளாண் அடுக்கில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் உதவும். டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கீட்டை முழுமையாக முடித்தால், அதில் இடம்பெற்ற தகவல்கள், அரசு துறைகள் மற்றும் வங்கிகளுக்கு வழங்கப்படும்.
நடப்பு ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, பயிர்களின் விபரங்களை முழுமையாக சேகரிக்க, வேளாண் துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, தமிழக வேளாண் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் கல்லுாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வேளாண் கல்லுாரிகளின் 23,000 மாணவ - மாணவியர், கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், 7,000 வேளாண் துறை அலுவலர்களும், மாணவர்களுக்கு உதவி வருகின்றனர். கணக்கெடுப்பு பணிகள், கடந்த 6ம் தேதி முதல் நடந்து வருகின்றன. இதுவரை, 2.5 கோடிக்கு கூடுதலான நிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இப்பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்களை, கல்லுாரிகளில் இருந்து அழைத்து செல்வதற்கு பஸ் வசதி, காலை, மதியம் உணவு, தங்குவதற்கான இடவசதி, வேளாண் துறையால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இந்த கணக்கெடுப்பு பணி, களப்பயிற்சியாக அமைந்து உள்ளது.
நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, 100 சதவீத பயிர்களும் கணக்கீடு செய்யப்படும். இதன் வாயிலாக மின்னணு முறையில் தகவல்கள், விவசாயிகளின் விருப்பத்தின்படி, மற்ற துறைகளுக்கும், வங்கிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.