ADDED : ஜூலை 07, 2026 04:11 AM

சென்னை: ''ஓணம் பண்டிகை ஒட்டி, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவுக்கு, 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்,'' என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
டில்லியில் நேற்று, அவர் அளித்த பேட்டி: ஓணம் கொண்டாட்டங்கள், வரும் ஆக., 16ம் தேதி தொடங்கி, திருவோணம் எனும் மங்களகரமான நாளில், ஆக., 26ம் தேதி முடிகிறது. இந்த பண்டிகை மற்றும் சுற்றுலா சார்ந்த நிகழ்வுகள், மாதம் முழுதும் தொடர்ந்து நடக்கும்.
பயணியர் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் வேண்டும் என, அம்மாநில பா.ஜ., நிர்வாகிகள், பயணியர் சங்க நிர்வாகிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவில் உள்ள நகரங்களுக்கு, 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளை, அந்தந்த ரயில்வே மண்டலங்கள் வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.
