ADDED : அக் 01, 2025 07:59 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் டிசம்பர் இறுதிக்குள் நூறு சதவீதம் வரி வசூலை முடிக்க நகராட்சி நிர்வாக இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் வரி வசூலில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றின் கீழ் ஒவ்வொரு நிதி ஆண்டும் ஏப்., முதல் செப்., வரை முதலாம் அரையாண்டும், அக்., முதல் மார்ச் வரை இரண்டாம் அரையாண்டும் என கணக்கிட்டு சொத்து, தொழில், குடிநீர் உள்ளிட்ட வரிகளை அவற்றின் ஊழியர்கள் வசூலித்து வருகின்றனர்.
இதற்காக ஒவ்வொரு அரையாண்டிற்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு 15 நாட்களுக்குள் வரித்தொகையை செலுத்த உள்ளாட்சி அமைப்புகள் அறிவுறுத்தும். ஆனால் ஊழியர்கள் ஆண்டின் கடைசி நாள் வரை வசூலில் ஈடுபட்டாலும் நுாறு சதவீத வரி வசூலாகாமல் இருக்கும்.
இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வரி வசூலிப்பதை கைவிட்டு ஒரு நிதியாண்டு முழுவதற்கான சொத்து, தொழில், குடிநீர் உள்ளிட்ட வரி இனங்களுக்கு நோட்டீஸ்களை நகராட்சி ஊழியர்கள் கொடுத்துள்ளனர்.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் டிச., இறுதிக்குள் நூறு சதவீத வரி வசூலை செய்து முடிக்கும்படி அனைத்து நகராட்சிகளுக்கும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தினசரி வரி வசூல் சதவீதத்தையும் கண்காணித்து வருகிறது.
இதில் பெரும்பாலான நகராட்சிகளில் 30 முதல் 40 சதவீதம் வரி வசூல் நடந்துள்ள நிலையில் தினமும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய நகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இம்மாதம் தீபாவளி பண்டிகை வரயிருப்பதால் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் வரி தொகையை தீபாவளி கழித்து வந்து வாங்கிக் கொள்ளும்படி கூறுகின்றனர். இருப்பினும் ஏராளமானோர் நகராட்சி அலுவலகத்தில் தாமாகவே வரியை செலுத்தியும் வருகின்றனர்.