21 கி.மீ.,க்கு 1,000 ரூபாயா? கூடுதல் கட்டணம் கேட்ட ரேபிடோ டிரைவர் மீது புகார்
21 கி.மீ.,க்கு 1,000 ரூபாயா? கூடுதல் கட்டணம் கேட்ட ரேபிடோ டிரைவர் மீது புகார்
ADDED : அக் 31, 2024 02:41 PM

சென்னை: சென்னையில் 21 கி.மீ., தொலைவு பயணத்திற்கு ரூ.1,000 கேட்டதாக ரேபிடோ டிரைவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருப்பவர் அசோக் ராஜேந்திரன். இவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்வதற்காக, ரேபிடோவில் கார் புக் செய்துள்ளார்.
21 கி.மீ., தொலைவுக்கு செல்ல ரூ.1,000 கேட்டு சண்டை போட்டதாக ரேபிடோ டிரைவர் மீது அசோக் ராஜேந்திரன் புகார் அளித்துள்ள சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ரேபிடோ உதவி மையத்தை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால், தனது லிங்க்டுஇன் பக்கத்தில் இது பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், ஆன்லைன் ஆப்பில் ரூ.350 கட்டணமாக காண்பித்த நிலையில், ரூ.50 உயர்த்தி ரூ.400 தருவதாக சொன்னதால், டிரைவரும் சம்மதித்து எங்களை பிக்அப் செய்து கொண்டார். ஆனால், அதன்பிறகு சென்னையில் தண்ணீர் அதிகம் தேங்கியிருக்கும் என்பதால், ரூ.1,000 தருமாறு டிரைவர் கேட்டு வாக்குவாதம் செய்தார். ஒரு வழியாக ரூ.800 தருவதாக ஒப்புக் கொண்டோம்.
ஆனால், நாங்கள் சென்ற வழியில் எங்கும் தண்ணீர் தேங்கி நிற்கவில்லை. இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை.
ஓட்டுநர்கள் கூடுதல் தொகை கேட்கின்றாரா? என்று ஆப்பில் புகார் அளிக்கும் வசதி இருந்தும், அதனை பயன்படுத்தி, புகார் அளித்தாலும் எந்த பதிலும் இல்லை. அப்புறம் ஏன் அதனை வைத்துள்ளீர்கள்? கூடுதல் தொகை வாங்கும் டிரைவர்களுக்கு ரேபிடோ நிறுவனமே உடந்தையாக உள்ளது, என்று குற்றம்சாட்டியுள்ளார்.
உடனே இதற்கு பதிலளித்த ரேபிடோ நிறுவனம், உங்கள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுபோன்று மீண்டும் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளது.

