ADDED : மே 11, 2025 12:19 AM
சென்னை:'போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க, மீனவ இளைஞர்கள், 1,000 பேர் தேர்வு செய்யப்பட்டு, 300 பேர் ஊர்க்காவல் படையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்' என, கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
கடல் வழியாக, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க, கடலோர கிராம விழிப்புணர்வு குழுக்களை ஏற்படுத்தி வருகிறோம். குற்றங்களை தடுக்க, கடலோர பகுதிகளில் உள்ள, 14 மாவட்டங்களை சேர்ந்த, மீனவ கிராம இளைஞர்கள், போலீசாருக்கு உதவி செய்து வருகின்றனர்.
அவர்களில், 1,000 பேரை தேர்வு செய்து உரிய பயிற்சி அளித்துள்ளோம். அவர்களில் முதல்கட்டமாக, 300 பேர் ஊர்க்காவல் படையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கடலோர கிராமங்களில் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும், மீனவ சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், இந்திய கடற்படை, கடலோர காவல் படை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுகளில் சேர, கடலுார், ராமநாதபுரம், கன்னியாகுமரியில் உள்ள மையங்களில், இலவசமாக தங்கும் வசதியுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

