அ.தி.மு.க., சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனுக்கள் பழனிசாமிக்காக 2,187 மனு
அ.தி.மு.க., சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனுக்கள் பழனிசாமிக்காக 2,187 மனு
ADDED : ஜன 02, 2026 02:02 AM
சென்னை: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட 10,175 விருப்ப மனுக்கள் வந்திருப்பதாகவும், அதில் 2,187 மனுக்கள் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி போட்டியிட அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அ.தி.மு.க., தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு .க.,வினர், கடந்த டிசம்பர் 15 முதல் 23 வரையும், டிச., 28 முதல் 31ம் தேதி வரையும் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கட்சியினர் விருப்ப மனுக்களை அளித்தனர்.
தங்களது தொகுதிகளில் பழனிசாமி போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து, 2,187 மனுக்கள்; கட்சியினர், தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டி 7,988 மனுக்கள் என மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் வந்துள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இருந்தவரை, 20,000 விருப்ப மனுக்கள் வந்தன. ஆனால், தற்போது, கடந்த டிசம்பர் 23ம் தேதி வரை 9,000 மனுக்கள் மட்டுமே வந்தன. அதனால், காலக்கெடு அளிக்கப்பட்டது. ஆனாலும், கூடுதலாக 1,000 பேர் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளனர்.
அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
ஜெயலலிதா இருக்கும்வரை, சாதாரண தொண்டருக்கு கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். அதனால், அனைவரும் ஆர்வமுடன் விருப்ப மனு அளிப்பர்.
இப்போது, வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலர்களின் பங்கு முக்கியமாக உள்ளது. இதனால், விருப்ப மனு அளிப்பதில் அடிமட்ட நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை.
காலக்கெடு நீட்டிக்கப்பட்டதால், 12,000 மனுக்கள் வரும் என கட்சித் தலைமை எதிர்பார்த்தது. ஆனால், 10,175 மனுக்கள் மட்டுமே வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

