அரசு மருத்துவமனையில் 21 பைக்குகள் திருடிய 108 ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
அரசு மருத்துவமனையில் 21 பைக்குகள் திருடிய 108 ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
ADDED : மார் 07, 2024 11:39 AM

விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பைக்குகளை திருடிய ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் 21 பைக்குகளை பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தொடர்ந்து பைக்குகள் திருடு போனது.
எஸ்.பி., தீபக் சுவாச் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி., சுரேஷ் மேற்பார்வையில் விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று காலை 6:00 மணிக்கு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மருத்துவமனையிலிருந்து பைக்கில் வந்த வாலிபரை நிறுத்திய போது பைக்கை விட்டுவிட்டு தப்பியோட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், மருத்துவமனையில் இருந்து பைக்கை திருடி வந்தது தெரிந்தது. மேலும் அவர், விழுப்புரம், தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த மணி மகன் சுரேஷ், 32; என்பதும், 7 ஆண்டுகளாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் துாய்மைப் பணியாளராக பணி செய்து, தற்போது 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
ஆம்புலன்ஸ் டிரைவராக இருப்பதால், யாருக்கும் சந்தேகம் வராதபடி அங்கிருந்த பைக்குகளை திருடி விற்றதை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, பல்வேறு நபர்களிடம் விற்ற 21 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

