கடந்த ஆண்டில் நடந்த அதிரடியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 11 பேர் கைது என்.ஐ.ஏ., அதிகாரிகள் தகவல்
கடந்த ஆண்டில் நடந்த அதிரடியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 11 பேர் கைது என்.ஐ.ஏ., அதிகாரிகள் தகவல்
ADDED : ஜன 02, 2025 11:24 PM
சென்னை:நாடு முழுதும், 2024ல், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்செயலுக்கு எதிராக, 2024ல் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடு முழுதும் பயங்கரவாதத்தை முறியடிக்க, பல மாநிலங்களைச் சேர்ந்த, 1,678 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஐ.எஸ்., பயங்கரவாதிகள், 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜிகாதிகளாக தங்களை அறிவித்து, பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்த, ஜம்மு - காஷ்மீர் ஜிகாதிகள், 5 பேர் உட்பட, 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு, 'ராமேஸ்வரம் கபே' ஓட்டல் குண்டு வெடிப்பு வழக்கில், துரிதாக செயல்பட்டு, பயங்கரவாதிகள், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த, 27 பேர் கைதாகினர். அவர்களில் கேரளாவில் பேராசிரியரின் கைகளை வெட்டி விட்டு, 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சாவீத்தும் ஒருவர்.
நாடு முழுதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பினர் உள்ளிட்டோரிடம் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குறிப்பாக, ஜம்மு, ஜெய்ப்பூர், ராஞ்சி, பாட்னா, சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில், 9 எம்.எம்., பிஸ்டலுக்கான, 34 குண்டுகள், சீனா, துருக்கி நாட்டு பிஸ்டல்கள், சீன நாட்டு துப்பாக்கி குண்டுகள், டெட்டனேட்டர், 75 கிலோ வெடி மருந்துகள், ரைபிள் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பதுங்கி இருந்த, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தார்சிங் சாந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். பயங்கரவாதம் மற்றும் பிற வகையான குற்றங்கள் தொடர்பாக, நாடு முழுதும், 662 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும், பி.கே.ஐ., எனப்படும் பயங்கரவாத அமைப்பின் தலைவர் வத்வா சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர், பஞ்சாப் மாநிலத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான விகாஸ் பிரபாகர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்.
காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பாக, 101 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடகிழக்கு பிராந்திய கிளர்ச்சி தொடர்பாக, 18 வழக்குகள் பதிவாகி, 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுதும், 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக, நக்சலைட்டுகள் உள்ளிட்ட இடதுசாரி பயங்கரவாதம் தடுப்பு நடவடிக்கையாக, 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 69 பேர் கைது செய்யப்பட்டனர்; 19.57 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.