புதுக்கோட்டை மாநகராட்சிக்கு 11 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு 11 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
ADDED : மார் 17, 2024 07:47 AM
புதுக்கோட்டை : புதுக்கோட்டை நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தும் அறிவிப்பை, கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். நேற்று முன்தினம் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தும் அரசாணை வெளியிடப்பட்டது.
இதில், புதுக்கோட்டை நகராட்சி, வாசவாசல், முள்ளுர், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, 9ஏ நத்தம் பண்ணை, 9பி நத்தம் பண்ணை ஆகிய 8 ஊராட்சிகள் முழுமையாகவும், தேக்காட்டூர், திருவேங்கைவாசல், வெள்ளனுார் ஊராட்சிகள் பகுதியாகவும், கஸ்பா காடுகள் முழுதும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதனால் கிராம பகுதிகளில் நூறு நாள் வேலை திட்டம், திருமண உதவி திட்டம், பிரதமரின் இலவச வீடு திட்டம், ஊராட்சிக்கு மத்திய அரசு சிறப்பு திட்டங்கள் கிடைக்காது. மேலும், சொத்துவரி, தொழில்வரி உட்பட பல கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது.
இதனால், 'எங்கள் கிராமம் எங்களுக்கே; வேண்டாம் மாநகராட்சி' என, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, லோக்சபா தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படவும் கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

