தென்மாவட்டங்களில் கொலை உட்பட பல வழக்குகளில் 1,133 பேருக்கு சிறை
தென்மாவட்டங்களில் கொலை உட்பட பல வழக்குகளில் 1,133 பேருக்கு சிறை
ADDED : ஆக 06, 2025 06:57 AM

மதுரை : தென்மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் கொலை, கொலை முயற்சி, போதை பொருள் தடுப்பு தொடர்பாக 709 வழக்குகளில் 1133 பேருக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது.
தென்மண்டல ஐ.ஜி., பிரேம்குமார் ஆனந்த் சின்ஹா முயற்சியால் விசாரணை, நீதிமன்ற நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு தென்மாவட்ட போலீசார் இச்சாதனையை செய்துள்ளனர். குறிப்பாக, 89 கொலை வழக்குகளில் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக நெல்லையில், 15 வழக்குகளில் தண்டனை கிடைத்துள்ளது. ஒரு வழக்கில் துாக்கு தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.
தேனியில் 15, துாத்துக்குடி 13, விருதுநகர் 12, சிவகங்கையில் 9 வழக்குகளில் மொத்தம் 196 பேருக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது. இதில் 27 பேர் ரவுடிகள். மதுரை, நெல்லை மாவட்டங்களில் 14 ரவுடிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு, 232 குற்றவாளிகள் தொடர்புடைய 132 கொலை வழக்குகளில் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில், 47 வழக்குகள் ரவுடிகள் தொடர்புடையது.
கடந்த, 6 மாதங்களில் நடந்த 52 கொலை முயற்சி வழக்குகளில் நெல்லை 17, தேனி 15, ராமநாதபுரத்தில் 12 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது. இதில், 9 பேர் ரவுடிகள். கடந்தாண்டு, 4 ரவுடிகள் உட்பட, 93 பேர் தொடர்புடைய, 62 கொலை முயற்சி வழக்குகளில் போலீசார் தண்டனை பெற்று தந்துள்ளனர்.
இந்தாண்டில் ஜூன் வரை 582 வழக்குகளில், 857 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதில், 244 பேர் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள். போதை பொருள் விற்றதாக மதுரை 7, திண்டுக்கல் 4, தேனி 2 வழக்குகளில் தண்டனை தரப்பட்டுள்ளது. கடந்தாண்டு, 18 வழக்குகளில், 1164 பேருக்கு, 769 வழக்குகளில் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா கூறுகையில், ''2024, 2025ல் இதுவரை பெற்றுத்தரப்பட்டுள்ள சிறை தண்டனை, தென்மாவட்ட போலீசாரின் தீவிர விசாரணை, தொடர் கண்காணிப்பு, நீதிமன்ற நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு போன்ற காரணங்களால் சாத்தியமானது. ரவுடிகள், தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருள் குற்றவாளிகள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டு தண்டனை பெற்றுத்தரும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது,'' என்றார்.