பத்திரப்பதிவுகள் அதிகரிப்பால் 7 மாதத்தில் ரூ.11,733 கோடி வசூல்
பத்திரப்பதிவுகள் அதிகரிப்பால் 7 மாதத்தில் ரூ.11,733 கோடி வசூல்
ADDED : நவ 13, 2024 04:49 AM

சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவுகள் அதிகரித்து வருவதால், கடந்த ஆண்டை விட நடப்பு நிதியாண்டில் இதுவரை, 11,733 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக, பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள் குறித்த சீராய்வு கூட்டம், சென்னையில் நேற்று பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:
தமிழகத்தில் நடப்பு நிதி ஆண்டில், அக்டோபர் இறுதி வரையிலான ஏழு மாதங்களில், பத்திரப்பதிவுகள் வாயிலாக, 11,733 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 10,511 கோடி ரூபாய் வசூலானது.
கடந்த ஆண்டைவிட தற்போது, 1,222 கோடி ரூபாய் கூடுதலாக வசூலாகியுள்ளது. பத்திரப்பதிவு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. முகூர்த்த நாள் என்பதால், நாளையும், நாளை மறுதினமும், சார்-பதிவாளர் அலுவலகங்களில், பத்திரங்கள் பதிவு செய்ய கூடுதல், 'டோக்கன்'கள் வழங்கப்படும். வழக்கமாக, 100 டோக்கன்கள் வழங்கும் இடங்களில், 150 டோக்கன்களும் மற்றும் 200 வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்களும் வழங்கப்படும்.
பதிவு முடிந்த பத்திரங்களை, உடனடியாக மக்களுக்கு திருப்பித் தர வேண்டும், வில்லங்க சான்று, பிரதி ஆவணங்களை உடனுக்குடன் அளிக்க வேண்டும். பத்திரப்பதிவின் போது தானியங்கி பட்டா மாறுதல் வசதியை, சார்- பதிவாளர்கள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.