கல்லூரிகளில் 1,179 உதவி பேராசிரியர்கள் நியமனம் : அமைச்சர் அறிவிப்பு
கல்லூரிகளில் 1,179 உதவி பேராசிரியர்கள் நியமனம் : அமைச்சர் அறிவிப்பு
ADDED : ஆக 22, 2011 10:52 PM

சென்னை : அரசு கலை கல்லூரிகளில், 1,025 உதவி பேராசிரியர்கள், பொறியியல் கல்லூரிகளில், 154 உதவி பேராசிரியர்கள், பாலிடெக்னிக்குகளில், 139 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
உயர்கல்வித் துறையில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் பற்றி அமைச்சர் பழனியப்பன் வெளியிட்ட அறிவிப்புகள்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், சேர்க்கை விகிதம் உயர்வதை கருத்தில் கொண்டு, புதிய பாடப் பிரிவுகளை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக, 34 அரசு கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள் இந்த கல்வியாண்டு முதல் துவங்கப்படும்.
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,025 உதவி பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், இந்த ஆண்டே நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பாலிடெக்னிக்குகளில் காலியாக உள்ள, 139 விரிவுரையாளர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். அரசு பொறியியல் கல்லூரிகளில், பல்வேறு பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள, 154 உதவி பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். அரசின், 23 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 3 கோடியே, 19 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய் செலவில், கணினிகள் மற்றும் அவை சார்ந்த உபகரணங்கள் வாங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

