ADDED : ஜன 28, 2025 12:25 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர்,12 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பலர் போலியான ஆவணங்கள் வைத்துக் கொண்டு பணிபுரிவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்களில் ஏராளமான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் தங்கி வேலை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நல்லூர் பகுதியில் வட மாநிலத்தினர் தங்கி இருக்கும் இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு தங்கி உள்ளவர்களின் ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதித்தனர்.
அப்போது சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் 12 பேர் தங்கியிருப்பதை கண்டறிந்தனர். அவர்களை கைது செய்து மாநகர போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போன்று சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 28 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.