ஓய்வூதியர்களின் குறைகளுக்கு தீர்வு காண 12 உதவி மையங்கள்
ஓய்வூதியர்களின் குறைகளுக்கு தீர்வு காண 12 உதவி மையங்கள்
ADDED : ஜூலை 12, 2025 01:58 AM

சென்னை:ராணுவ அமைச்சக ஓய்வூதியர்களின் குறைகளுக்கு தீர்வு காண, 12 மாவட்டங்களில் உதவி மையங்கள் திறக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக, பாதுகாப்பு துறை கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் கூறினார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் மொத்தம் 2.05 லட்சம் ஓய்வூதியர்கள் இருக்கின்றனர். இதில், 10 சதவீதம் பேர் இன்னும் ஓய்வூதியம் பெறாமல் இருக்கின்றனர். இதற்கிடையே, நாட்டின் முப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களின் குறை தீர்ப்பு முகாம், ஜூன் 30ம் தேதி திருச்சியில் நடந்தது.
இதில் 7000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்; 5000 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. மேலும், ஒரே நாளில் 14 பேருக்கு தீர்வு காணப்பட்டு, 1 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. எஞ்சியுள்ள 2,000 புகார்களுக்கு, ஒரு மாதத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், ஐந்து நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, தமிழகம் முழுதும் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றின் வாயிலாக பெறப்பட்ட 5100 ஓய்வூதியர்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டம் செயல்பட்டது. மற்ற மாநிலங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. அடுத்தகட்டமாக மதுரை, வேலுாரில் குறை தீர்ப்பு கூட்டம் நடக்க உள்ளது. குறிப்பாக, மதுரையில் நவம்பர் மாதம் இந்த குறை தீர்ப்பு கூட்டம் நடக்கும்.
ஓய்வூதியர்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் உதவி மையங்கள் திறக்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.