முதல்வர் கோப்பை போட்டிகள் 12 லட்சம் பேர் பங்கேற்பு: உதயநிதி
முதல்வர் கோப்பை போட்டிகள் 12 லட்சம் பேர் பங்கேற்பு: உதயநிதி
ADDED : அக் 15, 2024 06:28 AM

சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கில் நடக்கும் முதல்வர் கோப்பை மாநில போட்டிகளை, துணை முதல்வர் உதயநிதி நேற்று பார்வையிட்டார்.
அப்போது, 52 கிலோ எடை பிரிவுக்கான கல்லுாரி மாணவியரின் ஜூடோ போட்டிகளை பார்வையிட்டு, வெற்றியாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அங்குள்ள உணவுக் கூடத்தை ஆய்வு செய்த பின், வீராங்கனையருடன் உரையாடியபடி மதிய உணவு சாப்பிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
இந்தாண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்காக, முதல்வர், 83.37 கோடி ரூபாய் ஒதுக்கியதில், 37 கோடி ரூபாயை பரிசுத் தொகைக் காக மட்டுமே அறிவித்து உள்ளார்.
கடந்தாண்டு ஐந்து லட்சம் பேர் பங்கேற்ற நிலையில், இந்தாண்டு 12 லட்சம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஐந்து பிரிவுகளில், 36 வகையான விளையாட்டுகளில் நடக்கும் இந்த போட்டிகளை, 10,000க்கும் மேற்பட்ட நடுவர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் நெறிப்படுத்துகின்றனர்.
இதில் வெற்றி பெறும் இளம் வீரர் - வீராங்கனையரை தேர்வு செய்து பயிற்சி அளித்து, சர்வதேச போட்டியாளர்களாக்கி, தமிழகத்தை நாட்டின் விளையாட்டு தலைநகராக்க வேண்டும் என்பதே குறிக்கோள்.
இறுதி போட்டியில் வெற்றி பெறும் வீரர் - வீராங்கனையருக்கு, வரும் 24ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், சான்றிதழ், பரிசு மற்றும் கேடயங்களை வழங்க உள்ளார்.
போட்டிகளுக்கு தடையாக மழை இருந்தால், வீரர் - வீராங்கனையரை பத்திரமாக தங்க வைத்து, ஏற்கனவே அறிவித்துள்ள நாட்களுக்கு பின் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.