தென்காசி மாவட்டத்தின் 12 ஊராட்சிகள் துாத்துக்குடி மாவட்டத்தில் இணைப்பு
தென்காசி மாவட்டத்தின் 12 ஊராட்சிகள் துாத்துக்குடி மாவட்டத்தில் இணைப்பு
ADDED : நவ 23, 2025 01:42 AM
சென்னை: தென்காசி மாவட்டத்தில் இருந்த, 12 கிராம ஊராட்சி மக்களின் கோரிக்கையை ஏற்று, அவை துாத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த தென்காசி, 2019ல் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
தொடர் போராட்டங்கள் தென்காசி மாவட்டத்தின், மேற்கு எல்லை பகுதியாக கேரளா அமைந்துள்ளது. கிழக்கே துாத்துக்குடி, வடக்கே விருதுநகர், தெற்கே திருநெல்வேலி மாவட்டங்கள் உள்ளன.
தென்காசி மாவட்டத்தில், 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அதில், குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய மக்கள், தங்கள் பகுதியை, துாத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தென்காசி மாவட்டத்தில் இருந்த, முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேரி, அய்யனேரி, சித்திரம்பட்டி, பிள்ளையார்நத்தம், வெங்கடாச்சலபுரம், இளையரசனேந்தல் மற்றும் ஜமீன் தேவர்குளம் ஆகிய 12 கிராம ஊராட்சிகள், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
அரசாணை அதேபோல், முக்கூட்டுமலை ஊராட்சி, நடுவப்பட்டி, முக்கூட்டுமலை என, இரண்டு ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நடுவப்பட்டி ஊராட்சியில், நடுவப்பட்டி, ஸ்ரீரங்கராஜபுரம் ஆகிய கிராமங்கள் இடம் பெறும். இவ்வூராட்சி தென்காசி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
முக்கூட்டுமலை ஊராட்சியில், முக்கூட்டுமலை, கஸ்துாரிரங்கபுரம் கிராமங்கள் இடம் பெறும். இந்த ஊராட்சி துாத்துக்குடி மாவட்டத்தில் இணைக்கப்படும்.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

