ADDED : செப் 22, 2026 01:07 AM
சென்னை; சென்னை கிண்டி அண்ணா பல்கலை வளாகத்தில், கிண்டி பொறியியல் கல்லுாரி, அழகப்பா தொழில் நுட்பக் கல்லுாரி, எம்.ஐ.டி., எனும் சென்னை தொழில்நுட்ப கழகம் மற்றும் எஸ்.ஏ.பி., எனும் கட்டடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி இயங்கி வருகிறது.
பல்கலை வளாகத்தில், 27 மாணவ மாணவியர் விடுதிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், எஸ்.ஏ.பி., தவிர்த்து, மற்ற கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த, 7,010 மாணவ - மாணவியர் தங்கி படித்து வருகின்றனர்.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர் ஹரிஷ்குமார், பல்கலை வளாகத்தில் தங்கி, இறுதியாண்டு படித்து வந்தார்.
இந்த சூழலில், உண்ணி காய்ச்சல் பாதிப்பு காரணமாக, அவர் உயிரிழந்தார். மேலும், மூன்று மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள், மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பல்கலை வளாகத்தில், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் உள்ள மாணவ - மாணவியர், சிறப்பு முகாம்களில் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதுவரை, 1,000க்கும் அதிகமான மாணவ -மாணவியருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், ஒன்பது பேருக்கு, சோர்வு மற்றும் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் விருப்பப்படி, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது வரை, அண்ணா பல்கலை வளாக மாணவர்கள், 12 பேர் காய்ச்சல் பாதிப்பால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, பல்கலை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
