ADDED : செப் 22, 2026 01:08 AM
சென்னை: மது கடைகளில், மது பிரியர்கள் கூட்டமாக வருவதை தடுத்து, வரிசையை ஒழுங்குபடுத்த, 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' தடுப்பு உருவாக்க, 'டாஸ்மாக்' நிறுவனம், 1 லட்சம் ரூபாய் வரை வழங்க உள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்கிறது.
இந்த கடைகளில், மாலை முதல் இரவு 10:00 மணிக்கு, கடை மூடப்படும் வரை, மது பிரியர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால், மது பிரியர்கள், கடை பணியாளர்கள் இடையே, தகராறு ஏற்படுகிறது.
தற்போது, டாஸ்மாக் இணையதளம் வாயிலாக, மது பிரியர்கள் தங்களுக்கு வேண்டிய மது வகைகளை தேர்வு செய்து, அதன் வாயிலாகவே பணம் செலுத்தி, கடைகளில் வாங்கிக் கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக, தனி கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே, மது கடைகளில், மது பிரியர்களின் வரிசையை ஒழுங்குபடுத்த, ஒவ்வொரு கடைக்கும், இட வசதியை பொறுத்து, 5 மீட்டர் முதல், 10 மீட்டர் வரை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன தடுப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, ஒரு கடைக்கு, 1 லட்சம் ரூபாய் வரை வழங்க, தமிழக அரசிடம், டாஸ்மாக் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.
