தமிழகத்தில் மார்ச் முதல் ஜூன் வரை 1.20 லட்சம் பாஸ்போர்ட்கள் வினியோகம்
தமிழகத்தில் மார்ச் முதல் ஜூன் வரை 1.20 லட்சம் பாஸ்போர்ட்கள் வினியோகம்
ADDED : ஜூலை 05, 2025 06:44 PM
சென்னை:''தமிழகத்தில், கடந்த மார்ச் முதல் ஜூன் வரையிலான நான்கு மாதங்களில், 1.20 லட்சம் பாஸ்போர்ட்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன,'' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி விஜயகுமார் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஒவ்வொரு பார்லிமென்ட் தொகுதிக்கும், ஒரு பாஸ்போர்ட் சேவை மையத்தை துவக்கி, பாஸ்போர்ட் சேவைகள் விரைவாக கிடைப்பதை உறுதிசெய்ய உள்ளோம்.
விரைவில், வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூரில், தனியார் பங்களிப்புடன் புதிய அஞ்சல் துறை பாஸ்போர்ட் சேவை மையம் துவக்கப்படும். தற்போது, பாஸ்போர்ட் சேவையின் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன.
அதனால், சாதாரண விண்ணப்பங்கள், ஒரு மாதத்திற்கு உள்ளாகவும், தத்கால் விண்ணப்பங்களுக்கு ஒரு வாரத்துக்கு உள்ளாகவும், பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
தேவைப்படுவோருக்கு நேரடியாக பாஸ்போர்ட் வழங்க, நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனங்கள் உள்ளன. இவற்றின் மூலமாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, விண்ணப்பங்களை பரிசீலித்து, விரைவாக பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நாளை முதல் 9ம் தேதி வரை, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, மண்டல பாஸ்போர்ட் அலுவலக இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
தற்போது வழங்கப்படும் அனைத்து பாஸ்போர்ட்களிலும், ஆர்.எப்.ஐ.டி., என்ற, டிஜிட்டல் சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை விரைவாக முடிக்கலாம்.
ஏற்கனவே வழங்கப்பட்ட, 'சிப்' இல்லாத பாஸ்போர்ட்களும், 2028 பிப்., வரை செல்லுபடியாகும். தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் ஜூன் வரையிலான நான்கு மாதங்களில், 1.20 லட்சம் பாஸ்போர்ட்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.