ADDED : செப் 20, 2026 12:48 AM

சென்னை: வட சென்னை உட்பட மூன்று அனல் மின் நிலையங்களில், 1,220 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடும் வெயிலால் தினசரி மின் தேவை, 21 ஆயிரத்து மெகா வாட்டாக உள்ளது.
காற்றாலை மின் நிலையங்களில் மின்சாரம் கிடைப்பது குறைந்துள்ளதால், மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை - 3 அனல் மின் நிலையத்தில், 800 மெகா வாட் திறன் உடைய அலகில், 'ஜெனரேட்டர்' பழுது காரணமாக, நேற்று முன்தினம் இரவு, 9:52 மணி முதல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில், 210 மெகா வாட் திறன் உடைய, நான்காவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் இரவு, 9:10 மணி முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதே பிரச்னை காரணமாக, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 210 மெகா வாட் திறன் உடைய, இரண்டாவது அலகில் நேற்று அதிகாலை, 4:57 மணி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
