நிதி நிறுவனம் மோசடி செய்த பணத்தை கேட்டு 124 பேர் மனு
நிதி நிறுவனம் மோசடி செய்த பணத்தை கேட்டு 124 பேர் மனு
ADDED : அக் 10, 2024 10:31 PM
சென்னை:ஹிஜாவு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையை பெற்று தரக்கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், மேல் விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையை தலைமை யிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம், 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, பொது மக்களிடம் 4,414 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிறுவன இயக்குனர்கள் சவுந்தரராஜன் உள்பட, 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். நிறுவன இயக்குனர் அலெக்ஸாண்டர் உட்பட பலர் தலைமறைவாக உள்ளனர்.
இவர்களுக்கு எதிராக, 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான வழக்கு, 'டான்பிட்' என்ற நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், முதலீடு செய்த 9 கோடி 24 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை பெற்று தரக்கோரி, ஆந்திர மாநிலம் சித்துாரை சேர்ந்த ஜென்சி லின்டோ, சாய் தனுஷா, திருவண்ணாமலையை சேர்ந்த சத்யநாராயணா உள்ளிட்ட 124 பேர், சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், மனுதாரர்களின் புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி, மேல் விசாரணை நடத்தி, துணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.